ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் –
உங்களுக்கான ஆதரவு
இயல் 3
“விலைவாசி அதிகரிப்பிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க, நாம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளோம். உங்களுக்கு ஆதரவு தேவைப்படும் வரையில், நாங்கள் ஆதரவளிப்போம்.”
மற்ற பல நாடுகளில் இருப்பதைப் போன்று, போர், விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவற்றால் அதிகரிக்கும் விலைவாசியைச் சிங்கப்பூரும் எதிர்கொள்கிறது. ஆனால், இத்தகைய விலைவாசி அதிகரிப்பிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க, நாம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளோம்.


குடும்பங்கள் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள்; ரொக்க வழங்குதொகைகள், பயனீட்டுத் தள்ளுபடிகள் உள்ளிட்ட ஆதரவைப் பெறுவர். உங்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அவை துணைபுரியும். உங்களுக்கு ஆதரவு தேவைப்படும் வரையில், நாங்கள் ஆதரவளிப்போம்.
பெரிய குடும்பங்களுக்கான ஆதரவை மேம்படுத்தியுள்ளோம்; பெற்றோர் விடுப்பை விரிவுபடுத்தியுள்ளோம், பாலர்பள்ளிக் கட்டணங்களைக் குறைத்துள்ளோம். இவற்றால் பெற்றோர் பயன்பெறுவர். திருமணத்திற்கும் பிள்ளைப்பேற்றுக்குமான ஆதரவுத் திட்டங்களை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பிள்ளைகள் உடைய குடும்பங்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவியையும் வழங்குவோம்.
நாம் மேலும் அதிகமான ஆதரவு தேவைப்படும் சிங்கப்பூரர்களைக் கைதூக்கி, அவர்களுக்கு ஆற்றலளிப்போம்:
எங்கள் உறுதி
- நமது சமுதாயப் பாதுகாப்பு வலையை மீள்வலியுறுத்துவோம், எ.கா. கொம்கேர், மூத்தோர் ஆதரவுத்திட்டம்
- குறைந்த வருமான ஊழியர்களுக்கான வேலைநலன் திட்டத்தை மேம்படுத்துவோம்; படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தை மேலும் அதிகமான துறைகளுக்கு விரிவுபடுத்துவோம்
- கொம்லிங்க் பிளஸ் திட்டத்தின்மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களுடன் தனித்தனியாகப் பணியாற்றி, அவர்கள் மேம்பட்ட வாழ்க்கையைப் பெற உதவுவோம்
- எளிதில் பாதிக்கப்படவல்ல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பதை உறுதிசெய்வோம் – பாலர்பள்ளியில் சீரான வருகைப்பதிவுக்குத் துணைபுரிவோம்; மேலும் அதிகமான பிள்ளைப் பராமரிப்பு நிதியுதவிகளை வழங்குவோம்
நாம் உடற்குறையுள்ளோருக்கு உகந்த வகையில், சிங்கப்பூரை அனைவரையும் மேலும் உள்ளடக்கும் சமுதாயமாகப் புதுப்பிப்போம்:
எங்கள் உறுதி
- 18 வயதிற்குப் பின்னர், பள்ளியிலிருந்து வேலைக்கான நிலைமாற்றத்தை வலுப்படுத்துவோம்
- உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்போம்
- உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான சேவைகளுக்கு மேலும் தாராளமாக நிதியுதவி அளிப்போம்
- தன்னிச்சையாக வாழ்வதற்குரிய தெரிவுகளை மேலும் அதிகமாக வழங்கும் நோக்கில், புதிய சமூக வாழ்க்கை முறைமைகளை அறிமுகப்படுத்துவோம்