நாம் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து கொவிட்-19 கிருமிப் பரவலுடன் போராடி வருகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றனர். கிருமிப்பரவலைத் தடுத்து உயிர்களைக் காக்க, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.
இப்போது, குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கிறார்கள். கடைகளும் உணவகங்களும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுகின்றன. வர்த்தகங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளன. எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
நமது பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அடுத்தடுத்து நான்கு வரவுசெலவுத் திட்டங்களைச் செயற்படுத்தியிருக்கிறோம். இருப்புநிதியிலிருந்து எடுக்கப்பட்ட கடந்தகாலச் சேமிப்புடன், கிட்டத்தட்ட $100 பில்லியன் செலவு செய்கிறோம். நிறுவனங்கள், ஊழியர்கள், குடும்பங்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துசெல்ல உதவுவதே எங்கள் இலக்கு.